தமிழர் ஒற்றுமை டமால்!

தமிழர் ஒற்றுமை டமால்!
Published on

பிரிதல்; மேலும் பிரிதல். இதுதான் தமிழகத்தில் உருவாகும் அரசியல்,சமூக இயக்கங்களின் தலைவிதியாக இருக்கிறது. இது தவிர்க்க முடியாததாக இருப்பினும் பொதுப்பிரச்னைகளுக்காக ஒன்று சேர்வது என்பது சுத்தமாக நடக்காத ஒன்றாக மாறிப்போய்விட்டது.

கர்நாடக மாநில அரசியலைப் பார்க்கும்போதெல்லாம் தோன்றும் ஒரே எண்ணம் மாநில நலனை முன்வைத்து எல்லோரும் இணைய எப்போதும் தயங்குவதில்லை. ஆனால் தமிழகத்தில் அரசியல்கட்சிகளும் இயக்கங்களும் வேறுபாடுகளைக் களைந்து இன அழிப்பு நடந்தபோதுகூட ஒன்றிணைய முடியவில்லை. ஈழத்தமிழர் வேண்டாம். தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் பிரச்னையில்கூட எந்தவிதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசை எடுக்க வைக்கமுடியாமல் போனதற்கு இங்கிருக்கும் ஒற்றுமை இன்மைதான் காரணம். அருகில் உள்ள கேரளத்தை சேர்ந்த மீனவர்கள் சுட்டுக்கொல்லப் பட்டபோது மத்திய அரசு நடந்துகொண்ட முறைக்கும் பாக் நீரிணையில் மடியும் தமிழர்களுக்காக புதுடெல்லி நடந்துகொள்ளும் முறைக்கும் இருக்கும் வித்தியாசங் களைப் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.

 சமீபத்தில் 60க்கும் மேற்பட்ட தமிழ் தேசிய அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் தமிழர் தேசிய முன்னணி என்ற புதிய கட்சியை பழ.நெடுமாறன் உருவாக்கி உள்ளார்.  அப்படியானால் 2004-ல் பழ.நெடுமாறன் உருவாக்கிய தமிழர் தேசிய இயக்கம் என்ன ஆனது? தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக இயக்க ஒருங்கிணைப்புகளை, இயக்க உருவாக்கல்களை அவர் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.  இதுபோல எத்தனைமுயற்சிகளை அவர் செய்திருக்கிறார் என்ற எண்ணிக்கை அவருக்கே கூட மறந்திருக்கலாம். ஆனால் என்ன நடக்கிறது?

கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க தமிழர் நலனுக்காக இனத்துக்காகப் போராடுகிறோம் என்று சொல்லி இயக்கங்கள், கட்சிகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. பல ‘லெட்டர் பேடு’ இயக்கங்கள்மட்டுமே. இவற்றில் கூட ஒருங்கிணைப்பு இல்லாமல் போயிருப்பதுதான் தமிழினத்தின் சாபக்கேடாக இருக்கிறது.

‘’2006 தேர்தலின்போது மதிமுக, பாமக, வி.சி ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க திட்டமிடப்பட்டது. அதற்கான முயற்சிகளைச் செய்த குழுவில் நானும் இருந்தேன். ஆனால் மதிமுக, வி.சி. போன்ற கட்சிகள் ஒப்புக்கொண்டாலும் பாமக ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது 2011-ல் இப்படியொரு அணியைக் கட்டுவது சாத்தியப்படும் என்று அவர்களால் சொல்லப்பட்டது. அதுவும் நடக்கவில்லை” என்று சொல்கிறார் ஓவியர் புகழேந்தி.

‘’தமிழனின் இனவிடுதலையை முன்னிறுத்தி இணையும்போது ஒவ்வொருவரும் தங்களை அந்த அணிக்கு தலைவராக முன்னிறுத்தவேண்டும் என்று செயல்படுகிறார்கள். இதனால்தான் ஒருங்கிணைப்பு சாத்தியமில்லாமல் போகிறது” என்றும் சொல்கிறார் இவர்.

தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து அவரது மறைவுக்குப் பின்னால் ஆனைமுத்து பிரிந்துபோனது முக்கிய நிகழ்வு. பின்னர் கொளத்தூர் மணி, விடுதலை ராசேந்திரன், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரிந்து பெரியார் திராவிடர் கழகமாக செயல்பட்டது இன்னொரு முக்கிய நிகழ்வு. இந்த கழகமும் இப்போது இரண்டாக உடைந்துபோய் விட்டது. சமீபத்தில் பெரியார் திடலில் பிரிந்துபோன திராவிடர் கழக இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது அதற்கு திக தலைவர் கி.வீரமணியும் இசைவு தெரிவித்தார். அதற்கு பெரியார் திராவிடர் கழகமும் கூட்டியக்கமாக செயல்படுவதற்கு எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்று தெரிவித்திருந்தது. “ஆனால் இன்னமும் அதற்கான முன்னெடுப்பு எதுவும் நடைபெறவில்லை” என்கிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. “ தி.கவுடன் இணைந்து கூட்டியக்கமாக செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். அதைத்தான் அவரும் சொல்லியிருந்தார். ஆனால் அதற்குப் பிறகான வேலைகள் நடக்கவில்லை.”

அரசியலில் இருக்கும் கட்சிகள் இணைந்து செயல்படுவதில் சிரமங்கள் இருக்கலாம். ஆனால் அரசியல் சாராத இயக்கங்கள் தமிழினத்துக்காக பிற அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படுவதில் என்ன சிக்கலை எதிர்கொள்கின்றன?

“ஒவ்வொருவருக்கும் கொள்கைப் பிரிவுகள் இருப்பதால்தான் தனித்தனி இயக்கங்களாகச் செயல்படுகிறோம். இல்லையெனில் ஒரே இயக்கமாக இருந்துவிட்டுப் போய்விடலாமே? கூட்டியக்கமாக செயல்படுவதில் சிக்கல் இருக்கப்போவதில்லை. ஏற்கனெவே தமிழீழ விடுதலைப்புலிகள் தோழமைக் கழகம் என்ற ஒன்று இருந்தபோது அதில் நாங்களும் பிற அமைப்புகளும் இருந்தோம். அணுசக்திக்கு எதிரான கூட்டமைப்பிலும் தமிழ்தேசிய அமைப்புகள், மதிமுக, சீமான் போன்றவர்களுடன் நாங்களும் இருக்கிறோம். இதுபோன்ற பொதுவான பிரச்னைகளில் செயல்படத் தயாராக இருக்கிறோம். தமிழ்த்தேசியம் பேசுகிற பெரும்பாலானோர் சாதி ஒழிப்பு பேசுவது கிடையாது. அதை நாங்கள் பேசுகிறோம். இப்போது உருவாகியிருக்கும் திடீர் தமிழ்த்தேசிய அமைப்புகள் பெரியார் எதிர்ப்புப் பேசுகிறார்கள். பெரியாரும் தமிழ்த்தேசியம் பேசியவர்தானே?

ஆனால் இவர்கள் எங்கிருந்தோ எது எதையோ கண்டுபிடித்துக்கொண்டுவந்து அவருக்கு எதிரான எதிர்ப்பு வாதம் பேசுகிறார்கள். பொதுவான பிரச்னைகளில் ஒன்றுகூடும்போதுகூட அங்கே வந்து தங்கள் இயக்கத்தை முன்னிலைப்படுத்திப் பேசுகிறார்கள். தமிழ் வழிக்கல்விக்கான கூட்டியக்கத்தின் கூட்டத்தில் நாங்கள் கலந்துகொண்டோம். அங்கும்கூட தமிழ்த் தேசியவாதிகள் பெரியாரை விமர்சித்துப் பேசினார்கள். அதனால் நாங்கள் அந்த இயக்கக் கூட்டத்துக்கு இனியும் போகவேண்டுமா என்று யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டி ருக்கிறோம். பொதுப்பிரச்னைக்காக கூட்டியக்கம் நடத்துகிறவர்களும் சரி; அதில் பங்கேற்பவர்களும் அதில் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென பழகிக் கொள்ளவேண்டியிருக்கிறது” என்கிறார் கொளத்தூர் மணி.

தமிழக அரசியல், சமூக களத்தில் பொதுப்பிரச்னைகளில் ஒருங்கிணைப்பு இல்லை என்பதை தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொள்கிறார் மதிமுகவின் செய்தித் தொடர்பாளர் நன்மாறன். “ஆனால் எந்தப் பொதுப்பிரச்னையிலும் யார் தலைமையேற்பது என்று பாராமல் களத்தில் இறங்கிப்போராட வைகோ என்றுமே தயாராகத்தான் இருக்கிறார். அதுதான் கடந்தகால வரலாறு. ஒவ்வொரு கட்சிக்கும் அந்த காலகட்ட அரசியல் சூழல், கூட்டணிப் பங்கேற்பு ஆகியற்றைப் பொறுத்து அணுகுமுறை மாறுபடும். ஆனால் மதிமுகவைப் பொறுத்தவரை வைகோ இதில் எப்போதும் இரட்டை நிலை எடுக்காமல் பொதுப்பிரச்னைகளில் போராடவே செய்வார்” என்றும் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைச் சொல்கிறார்.

அண்டை மாநிலமான கேரளத்தில் எதிரெதிர்  நிலைப்பாடுள்ள கட்சித் தலைவர்கள் ஒரே விமானத்தில் பிரதமரைச் சந்தித்து பொதுப்பிரச்னைக்காக கோரிக்கை வைக்கச் செல்லமுடிகிறது. ஆனால் இங்கு? அதிமுகவும் திமுகவும் ஓரணியில் போராடவேண்டும் என்கிற ‘பெரிய்ய’ எதிர்பார்ப்பெல்லாம்  இப்போது நமக்கு இல்லை. அந்த கட்சிகளின் தலைமைகளுக்கு இடையே இட்டு நிரப்பவியலாத இடைவெளி உள்ளது. அதற்கு அடுத்த கட்ட நிலையில் இருக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பெரும் அழுத்தத்தை தமிழக அளவிலும் இந்திய அளவிலும் கொடுக்கலாமே என்பது  பொதுவான ஆதங்கம். எல்லா ஈகோக்களையும் புறந்தள்ளிவிட்டு ஒர் குடையின் கீழ், பொதுவான தமிழர் பிரச்னைகளுக்காக நம் தலைவர்கள் எப்போது சேர்வார்கள்?

தமிழகத்தில் தலைமைப் பைத்தியம்

“தன்முனைப்புதான் இதற்கு முக்கியக்-காரணம். சமீபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று ஒன்று உருவாக்கப்பட்டது. இயல்பாக இந்தக் கூட்டணி சட்டமன்றத்துக்கும் தொடரவேண்டும். ஆனால் இதற்கான சாத்-தியம் மிகக்குறைவு. காரணம் தன்னைத்தான் முதல்வராக ஆக்கவேண்டும் என்று ஒவ்வொரு-வரும் நினைப்பது. மக்கள் நலனுக்காக சொந்த நலனையும் கட்சியின் நலனையும் பாராத தலைவர்கள் இங்கே இல்லை. இதற்குக் காரணம் ஈகோ தவிர வேறொன்றும் கிடையாது.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது திமுக முறையாகப் பாடுபட்டது. ஜெயலலிதா முதல்வர் ஆனதும் உச்சநீதிமன்றத்தில் சரியாகப் போராடி வெற்றிபெற்றார். வைகோ, கட்சி சார்பு எங்கும் வெளிப்பட்டுவிடாமல் மக்களைத் திரட்டி கேரளாவுக்குச் செல்லும் சாலைகளை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தை நடத்தினார். இந்த விவகாரத்தில் தமிழகத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும் வேளையில் முதல்வரும் கலைஞரும் வெளியிட்ட அறிக்கைகள் இந்த பிரச்னையில் ஈடுபட்ட அனை-வரையும் ஒருங்கிணைத்துச் சொல்லும் அறிக்கைகளாக இல்லை.  இதன்-பின்னர் வைகோ வெளியிட்ட அறிக்கை-தான் அரசையும் பாராட்டி ஐந்து மாவட்ட மக்களுக்குக் கிடைத்த வெற்றி-யாகவும் அதை முன்வைத்தது. 

நெடுமாறன் இன்றைக்கு தமிழ்தேசிய இயக்கங்களை ஒருங்கிணைத்து இயக்கம் கட்டு-கிறார். ஆனால் அது அவர் இன்றைக்குச் செய்தது அல்ல. சுப.வீரபாண்டியன், தியாகு போன்றவர்களை இணைத்து முன்பே உருவாக்-கினார். ஆனால் அவர்கள் இவருடன் இணைந்து செயல்பட-முடியவில்லை. மணியரசன் அவர்களுடன் இணையவில்லை. நெடு-மாறனுடன் இணக்கமாக உள்ள சீமான் இதில் இணைய- முடியவில்லை. இவர்களுக்கு இடையே தமிழ் தேசியம் என்கிற நோக்கத்தில் பெரியவேறுபாடு இல்லை. இலக்கு, கொள்கை முரண்பாடு இல்லை. ஆனாலும் ஒருங்கிணைய முடியவில்லை.

இதற்கு தன்முனைப்புதான் காரணம். ஆல்பர் காம்யூ சொல்வார்: “யாருக்குப் பின்னாலும் என்னால் வரமுடியாது. யாருக்கும் நான் தலைமையேற்க முடியாது. தோளோடு தோள் உரச ஒன்றாகப் போகலாம்” என்று. ஆனால் இவர்கள் என் பின்னால் நீ வருகிறாயா இல்லையா என்கிறார்கள். யார் யார் பின்னால் வருவது என்கிற தலைமைப் பைத்தியம்! விவேகானந்தர் சொல்லுவார்:” ஒரு கப்பலுக்கு கேப்டன் ஒருவர்தான். அத்தனை ஊழியர்களும் கேப்டனாக ஆசைப்பட்டால் கப்பல் பயணம் நடக்காது. இந்தியாவில் அதுதான் நடக்கிறது. எல்லோருக்கும் தலைமைப் பைத்தியம்” என்று. இன்றைக்கு தமிழ்நாட்டில் அது மிகவும் கூடுதலாக இருக்கிறது. அது நம்மைப் பிடித்த சாபம். இங்குமட்டுமா? பாரீஸில் மூன்று லட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்கள் ஒன்றாக இருந்தால் வலுவுள்ள அமைப்பாக இருக்கலாம். ஆனால் அங்கே 125 தமிழ் அமைப்புகள் உள்ளன பலவற்றில் 10-15 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பர்”

நான்தான் பெரியாரின் உண்மையான சீடன்

தமிழருவி மணியன், கொளத்தூர் மணி  ஆகியோரிடம் பேசிய பின்னர் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானிடம் தமிழகக் கட்சிகள், இயக்கங்களின் ஒற்றுமை இன்மை பற்றிப் பேசினோம். அவரது பதில் மிக நீண்டது. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே:

‘’நான் சுமார் 18 ஆண்டுகளாக பெரியாரிய, அம்பேத்கரிய, தமிழ்தேசிய இயக்கங்களுடன் தொடர்புகொண்டு செயல்பட்டு வந்தவன். ஏன் ஒற்றுமை இல்லை என்று நீங்கள் கேட்ட கேள்வியை இந்தத் தலைவர்கள் எல்லோர் கிட்டயும் கேட்டவன். பழ.நெடுமாறன், தியாகு, சுப.வீரபாண்டியன் இவங்கல்லாம் ஒண்ணா இருந்திருந்தா எவ்வளவு வலிமையா இருந்திருக்கும்? நான் ஏன் திரைப்படம் எடுக்கறத விட்டுட்டு வந்து இப்படியொரு கட்சி ஆரம்பித்திருக்க போகிறேன்?

வீரமணிகூட கொளத்தூர் மணியும் ராமகிருஷ்ணனும் ஒண்ணா இருக்க முடியலை. ஏன் இவங்க இருவருமே ஒண்ணா இருக்கமுடியலை. திராவிடப் பின்னணியில் இருக்கவங்கதான் ஒண்ணா இருக்கமுடியலன்னா தமிழ்தேசிய பொதுவுடைமைப் பின்னணி கொண்ட பெ. மணியரசனும் தியாகுவும் ஒண்ணா இருக்க முடியலை. ராமதாஸ், திருமாவளவன், மருத்துவர் சேதுராமன், நெடுமாறன் எல்லாம் தமிழர் பாதுகாப்பு  இயக்கம்னு ஆரம்பிச்சு ஒண்ணா இருந்தாங்க. அப்ப அங்கதான் நான் திரையுலகிலிருந்து ஒரே ஆளா நான் சேர்ந்து இருந்தேன். ஆனால் அரசியல் தேர்தல் வசதிகளுக்காக அவங்க பிரிஞ்சுபோய்ட்டாங்க. நம்ம இனம் சாகுது; மொழி சாகுது அப்படிப்பட்ட நிலையிலும் நம் தலைவர்கள் ஒண்ணா சேர முடியலை. அப்பதான் நான் ஒருமுடிவுக்கு வந்தேன். இந்த தலைவர்களை நம்மால ஒண்ணு சேர்க்க முடியாது. ஆனால் தமிழர்களை ஒண்ணு சேர்க்கலாமேன்னுதான் கட்சி ஆரம்பிச்சு செயல்பட்டுக்கிட்டு இருக்கிறேன்.

தமிழ் தேசிய தளத்தில் இங்கயிருக்கும் இந்த எல்லா கட்சிகள் இயக்கங்களையும் விட லட்சக்கணக்கான மக்களை விஜயகாந்த் பின்னாடி சேரவைத்தது இவங்களோட தோல்விதானே?

எங்களைப் போல ‘திடீர் தமிழ் தேசியவாதிகள்’ பெரியாரை இழிவுபடுத்துவதாகச் சொல்கிறார்கள். எங்கே அப்படிச் செய்தோம்? பெரியாரை எங்கள் இயக்கம் மிகவும் மதிக்கிறது. அவரை முன்னத்தி ஏர் பிடித்தவராக உலகத் தலைவர்களுடன் சேர்த்து நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எதையும் கேள்வி கேள்; ஆராய்ந்து பார் என்று சொன்னவரை, அவர் சொன்னபடி ஆராய்ந்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். திருவள்ளுவரின் குறளில் 100தான் தேறும் என்று அவர் சொன்னபோது வாயை மூடிக்கொண்டிருந்தவர்கள் நாங்கள் கேட்டால் கொதிக்கிறார்கள்.  நான் தான் உண்மையில் பெரியாரின் சீடன். இந்த பெரியாரிஸ்டுகளிடமிருந்துதான் முதலில் பெரியாரைக் காப்பாற்றவேண்டும். இதைப்பற்றி இன்னும் ஆழமாக நான் பேசுவேன் உங்கள் பத்திரிகை இடம் போதாது. பெரியாரின்

சாதி ஒழிப்பை, கடவுள் மறுப்பை, பெண்ணிய விடுதலையை நாங்கள் ஏற்கிறோம். மொழிக்கொள்கையை இந்த திராவிட இயக்கங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றனவா? அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக சொன்னவற்றை ஏற்றுக்கொள்ள முடியுமா? பெரியாரியவாதிகள் மத அடிப்படைவாதிகளைப் போல இருக்கிறார்கள். திராவிட நாடு கொள்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழருக்கே என்றவர்கள் ஏன் தங்கள் கட்சிகளுக்கெல்லாம் திராவிட என்றே பெயர் சூட்டியிருக்கவேண்டும்?

தமிழருவி மணியன் எங்களை நெடுமாறனோடு இணைந்து நிற்கமுடியவில்லை என்கிறார். அவர் இந்திய தேசியர். ஏன் எங்களைப் பற்றிப் பேசவேண்டும்? இவ்வளவு  கட்சிகளை  பாஜகவுடன் சேர்த்தவர் எங்களையும் ஒன்று சேர்க்கவேண்டியதுதானே? நெடுமாறன் அய்யாவுக்கு நான் மகன். எப்போதும் அவருடன் இணைந்துதான் இருக்கிறேன். அவர் கட்டிய தமிழ் தேசிய முன்னணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. என்னால் போகமுடியாவிட்டாலும் எங்கள் கட்சிப் பிரதிநிதிகள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். நான் மீண்டும் சொல்கிறேன். நான் மட்டும்தான் பெரியாரின் பிள்ளை. இப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்துத்துவ சக்திகளை எதிர்த்து நான் மட்டும்தானே நின்றேன்? இவர்கள் யாராவது தமிழ்நாடு முழுக்க சென்று செயல்பட்டார்களா? அன்புமணிக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்தார்கள். அங்கும் அவர் வெற்றி பெற்றுவிட்டார்.

ஆகஸ்ட், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com